சென்னை, மே 1
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செயல்படுத்தும் பணியில் காவல்துறையினருடன் சேர்த்து ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
கொரோனா தடுப்புப் பணியில் தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள் எத்தகைய பணிகளை செய்கிறார்களோ, அதே பணிகளை செய்யும்படி ஊர்க்காவல் படையினரும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த பணியின் போது சாலைகளில் விதிகளை மீறிச் செல்பவர்களை தடுத்து விசாரிக்கும் போது அவர்களிடமிருந்து ஊர்க்காவல் படையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. அதைத்தடுக்க காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள், சிறப்புப்படிகள், இலவச ஆயுள்காப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் ஊர்க்காவல் படைவீரர்களுக்கும் வழங்குவது தான் நியாயம். இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.
ஊர்க்காவல் படை வீரர்கள் அனைவரும் காவல்துறையின் கட்டுப்பாட்டில், காவல்துறையினருக்கு இணையான பணிகளைத் தான் செய்கின்றனர். அதனால், தகுதியின் அடிப்படையில் தங்களையும் காவல்துறையில் சேர்க்க வேண்டும்; அதுவரை மாதத்தில் 24 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல முறை வலியுறுத்தியுள்ளது. ஆனால், ஊர்க்காவல் படையினரின் இந்த நியாயமான கோரிக்கை அரசால் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
ஊர்க்காவல் படையினரின் பணி என்பது மிகவும் சிக்கலானது. அது விருப்பத்தின் அடிப்படையிலான பணி மட்டுமே. ஆனால், காவல்துறையினர் எப்போது அழைத்தாலும் ஊர்க்காவல் படையினர் பணிக்கு வர வேண்டும். ஊர்க்காவல் பணி நிரந்தரமற்றது என்பதால், அந்த படையினரில் பெரும்பான்மையினர் வேறு ஏதேனும் பணியில் இருந்து கொண்டு, பகுதி நேரமாக ஊர்க்காவல் பணியை மேற்கொள்வார்கள். ஊர்க்காவல் பணி அதிகாரப்பூர்வமற்ற முறையில் நீட்டிக்கப்படும் என்பதால், அவர்களால் அவர்களின் முழுநேர பணியில் கவனம் செலுத்த முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. மாதத்திற்கு 24 நாட்கள் பணி வழங்கி, ஒரு நாளைக்கு ரூ.560 ஊதியம் வழங்கினால் கூட ஊர்க்காவல்படை வீரர்களுக்கு சந்திக்கும் பொருளாதார நெருக்கடி தீரும். அது சாத்தியமில்லை என்றால், ஊர்க்காவல் படையினரில் உடல் தகுதி மற்றும் கல்வித் தகுதி உள்ளவர்களை காவலர்களாக நியமிக்கலாம். அது ஊர்க்காவல் படை வீரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமின்றி, காவல்துறையையும் வலுப்படுத்துவதற்கு உதவும்.
தமிழகக் காவல்துறையின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,24,761 ஆகும். இவற்றில் 14,975 பணியிடங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி காலியாக உள்ளன. இவற்றில் 90 விழுக்காடு காவலர் பணியிடங்கள் ஆகும். கொரோனா தடுப்புப் பணிக்கு போதிய காவலர்கள் இல்லாத நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்த 8500 காவலர்கள் பயிற்சி முடியும் முன்பே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டாலும் கூட, 700 பேருக்கு ஒரு காவலர் தான் இருப்பார் என்பதாலும், காவல்துறைக்கான பணிச்சுமை அதிகரித்திருப்பதாலும் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல. இத்தகைய சூழலில் ஊர்க்காவல் படையினரை காவலர்களாக நியமிக்கலாம்.
தமிழக காவல்துறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு இளைஞர் காவல் படை என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அந்த பிரிவில் இருந்தவர்கள் குறிப்பிட்ட கால பணிக்கு பிறகு காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். தமிழ்நாடு இளைஞர் காவல் படையில் இருந்தவர்களை விட ஊர்க்காவல் படையில் இருப்பவர்களுக்கு அனுபவம் அதிகம். ஆகவே, ஊர்க்காவல் படையினரில் தகுதியும், திறமையும் உள்ளவர்களை தமிழ்நாடு காவல்துறையில் சேர்க்க அரசு முன்வர வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.