நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக முதலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அதிமுக கருத்துவேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகியது.
இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்த னாளை முன்னிட்டு அதிமுக பொ., செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பாரத பிரதமர் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தன் வலைதள பக்கத்தில், “எடப்பாடி பழனிச்சாமி தான் பிரதமர் என்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்து பிரதமர் வேட்பாளர் யார் என்கிற கேள்விக்கு பதில் இல்லாததன் வெளிப்பாடா? அல்லது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படுத்தும் யுக்தியா? அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் அம்மாவை ஒரு தேசிய தலைவராகவும், பிரதம அமைச்சருக்கு தகுதியான தலைவராகவும் பார்த்தார்கள். அதற்குரிய திறமை, செல்வாக்கு ஆளுமைத்திறன் அவரிடம் இருந்தது. ஆனால் எடப்பாடி பற்றி பேசும் பொழுது எந்த ஒரு இந்திய பிரஜையும் தலைவர் ஆகலாம் என்கிற தகுதி மட்டுமே முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது மட்டுமே தகுதி அல்ல. இதுபோன்ற பிரச்சாரங்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் பாரம்பரிய வக்குவங்கியை குறைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இபிஎஸ் முதலமைச்சராக இருந்தபொழுதும் கூட கட்சியும் ஆட்சியையும் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எந்த தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி-ன் எதிரிகள் அவரை வீழ்த்துவதற்கு உண்டான ஆயுதமாக தான் இதனை பார்க்க முடிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.