காங்கிரஸ் பிரபல அதானி நிறுவனம் மீது அமெரிக்க ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனால் இந்திய பொதுமக்களின் பணம் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் கால்பதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அதானி நிறுவன பங்குகள் 819 சதவீதம் உயர்ந்து 120 பில்லியன் டாலரை எட்டியுள்ளன. இதனால் அதானி உலக பணக்காரர்களில் மூன்றாம் இடத்தில் கௌதம் அதானி உள்ளார். அதானி குழும நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.46,000 கோடி சரிந்துள்ளது. இது இந்திய பங்கு சந்தையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டை ஹிண்டன்பெர்க் முன்வைத்திருப்பதாகவும், அதனால் அந்நிறுவனம் மீது வழக்குத்தொடர போவதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களில் முக்கிய நிறுவனங்களாக எல்ஐசி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறைகளும் உள்ளன. இதனால் பொதுமக்களின் பணமும் அதான் குழுமத்தால் ஆபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எஸ்பிஐ வங்கி 40சதவீதம் பணத்தை அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல எல்ஐசி நிறுவனமும் அதானி கேஸ், லாஜிஸ்டிக்ஸ், எண்டர்ப்ரைசஸ், ரென்யூவபில்ஸ் உள்ளிட்ட பல்வேறு கிளை நிறுவனங்களிலும் தோராயமாக ரூ.87,380 கோடியை முதலீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அதானி நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்டவற்றையும் பாதிக்கும் என்பதால் மக்கள் பணம் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸும், பொருளாதார வல்லுனர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவன பங்குகள் மற்றும் முதலீட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து செபி விசாரிக்க வேண்டுமென கூறியுள்ளது. இந்த பங்கு வர்த்தக சரிவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.