ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கிய சேவாபாரதி !

Filed under: தமிழகம் |

வே. மாரீஸ்வரன்

கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கோவையில் பல்வேறு இடங்களில் ஏழை எளிய மக்கள் ஒருவேளை சோறு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுடன் சாலையோரவாசிகளும் அன்றாட சோற்றுக்கு அல்லல்பட்டு வந்த நேரத்தில் ஏழை மக்களின் வீட்டிற்கும் சாலையோரவாசிகளுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உணவு வழங்கும் பணியில் சேவாபாரதி மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் களத்தில் இறங்கி பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகின்றனர்.

கோவை ஆர்எஸ் புரம் சத்குரு சேவா ஆசிரமத்தில் தினமும் காலை 6 மணிக்கு உணவு தயாரிக்கும் வேலை துவங்குகிறது. அதன்பின்னர் 11 மணியிலிருந்து மதியம் 2 30 மணி வரை கோவை மாநகரில் சுமார் 35 இடங்களை தேர்வு செய்து அங்கு தங்கியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கி வருகின்றனர். உணவு தயாரிப்பு மற்றும் விநியோக பணியை சுமார் 1200 பேர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்கின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப் பட்டதாம்.

மாநில சேவாபாரதி தலைவர் ராமநாதன் செய்தியாளர்களிடம் பேசும்போது நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பசியோடு இருப்பது என் கவனத்திற்கு வந்தது. உடனே அவர்களுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் கடந்த 19ஆம் தேதி இச்சேவையை துவங்கினோம். ஆரம்பத்தில் 250 பேருக்கு உணவு வழங்கி வந்தோம் பின்பு ஏழை எளிய மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் தற்போது கோவை மாநகரில் 35 இடங்களில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.

மாநில சேவாபாரதி தலைவர் ராமநாதன்

சேவா பாரதி மற்றும் ஆர். எஸ். எஸ். தொண்டர்கள் இணைந்து சேவையாற்றி வருகின்றனர். கோவை மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சேவை செய்யப்படுகிறது. அத்துடன் தாய்மார்களின் குழந்தைகள் பாலுக்காக கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் 100 கிராம் பால் பவுடர் பேக் செய்து வருகிறோம் மேலும் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரையும் வழங்கி வருகிறோம் என்றார்.