தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் இன்று (டிச.17) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 460 தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
“இந்தியாவிலேயே தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. பள்ளிக் கல்வித்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மருத்துவம் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த 400 மாணவர்கள் மருத்துவம் படிக்க உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார். அதற்கு முன்பாக பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் கேட்கப்படும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் அரையாண்டுத் தேர்வு நடத்திக் கொள்ளத் தடையில்லை. தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, புகாராகக் கொடுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 10 பள்ளிகள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2013-14 மற்றும் 2017-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் செய்யப்படும்”.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், எஸ்.பி. விஜயகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மார்ஸ் (திருப்பத்தூர்), குணசேகரன் (வேலூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.