சமீபத்தில் “கள்வன்” திரைப்படம் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் பாரதிராஜா, இவானா, கேபிஒய் பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது. காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது. அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட அவன் எடுக்கும் முடிவுகள், அவனை எதிர்பாராத பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவன் கனவு நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் கதை. “கள்வன்” படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், என்.கே.ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளார். வரும் மே 14 முதல், டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் “கள்வன்” ஸ்ட்ரீமாக உள்ளது.