காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது!

Filed under: இந்தியா,உலகம்,விளையாட்டு |

Untitled 4(275)ஸ்காட்லாந்து: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.கடந்த 23 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதன் நிறைவு விழா ஹம்ப்டன் அரங்கில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கின.முதலில் நட்சத்திரம் வடிவிலான விழா மேடையின் எதிரே, குடில்கள் போல் வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூடாரங்களை கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடினர். பின்னர், ஸ்காட்லாந்தின் பாரம்பரிய பேண்ட் வாத்திய கலைஞர்கள், தங்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் கம்பீர பேரணி நடத்தினர். இசை கலைஞர்கள் நடத்திய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின.

இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் ஆஸ்திரேலியாவிடம், காமன்வெல்த் போட்டிகளுக்கான அதிகாரபூர்வ கொடி வழங்கப்பட்டு, அந்த கொடி விழா அரங்கை வலம் வந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகி கைலி மினோக், தமது வசீகர குரலில் இனிமையான பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் கைலி மினோக், தமது குழுவினர் உடன் இணைந்து பாடிய ஆல் த லவ்வர்ஸ் என்னும் பாடல் அரங்கத்தை அதிர வைத்தது. அதையடுத்து, ஸ்காட்லாந்து நடிகர் சியாகான் ப்ளூ மற்றும் பாடகி டௌகி மாக்லென்ஆகியோர் துள்ளல் மிகுந்த பாடல்களை பாடி பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். இறுதியில் இரவுப்பொழுதை பகலாக்கும் வகையில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.