கிடுகிடு! ஓராண்டை கடந்தும் மிரட்டும் கொரோனா.. 2ம் அலைக்கு வாய்ப்பு அதிகம் சென்னைக்கு கடும் எச்சரிக்கை!
சென்னையில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னையில், 1,857 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பொதுமக்களின் தொடர் அலட்சியம், மாநகராட்சி சுகாதாரத்துறையின் சுணக்கம் போன்றவற்றால், சென்னையில், கொரோனா இரண்டாம் அலைக்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக, சுகாதார துறை எச்சரித்துள்ளது. சீனாவின், வூஹான் நகரில் பரவ துவங்கிய கொரோனா பாதிப்பு, உலகின் பல்வேறு நாடுகளில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஓமன் நாட்டில் இருந்து, தமிழகம் வந்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 45 வயது நபருக்கு, முதலில் கொரோனா கண்டறியப் பட்டது. கிடுகிடு உயர்வுஅதன்படி, 2020 மார்ச், 6ம் தேதி, அவருக்கு தொற்று கண்டறியப்பட்டு, மறுநாள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர் சிகிச்சைக்கு பின், சில வாரங்களில், குணமடைந்து வீடு திரும்பினார். அதன்பின், சென்னையில் கிடுகிடுவென அதிகரித்த தொற்று, மாநிலம் முழுதும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், இந்தியாவின் கொரோனா ‘ஹாட்ஸ்பாட்’டாக தமிழகமும், சென்னையும் இருந்தன.தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைள் மற்றும் அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறைகள் ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை காரணமாக, நோயாளிகள், விரைந்து குணமடைந்தனர். மேலும், பொதுமக்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்தது.
இதனால், கொரோனா தொற்று குறைய துவங்கியதுடன், பெரம்பலுார், அரியலுார் ஆகியவை, தொற்று இல்லாத மாவட்டங்களாகவும் இருந்தன.இந்நிலையில், மஹாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா தொற்று இரண்டாம் அலையில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இரண்டு வாரத்திற்கு முன், சராசரியாக, 150 என்ற எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட தொற்று, தற்போது, கிடுகிடுவென உயர்ந்து, நேற்று முன்தினம் நிலவரப்படி, 243 ஆக உயர்ந்து வருகிறது. மீண்டும் அதிகரிக்கும் குறிப்பாக, சென்னையில் எட்டு மண்டலங்களில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு, முக கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதற்கு, பொதுமக்கள், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதது முக்கிய காரணம். குறிப்பாக, ஐந்து சதவீதம் மக்கள் மட்டுமே, முறையாக முக கவசம் அணிக்கின்றனர். மீதமுள்ள, 95 சதவீதத்தினரில், சிலர் முக கவசம் அணிந்தாலும், அவை, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இல்லை. மாநகராட்சியில், பெரும்பாலான பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா தடுப்பு பணியில், அவர்கள் முன்பு போல் ஈடுபடுவதில்லை. மேலும், தேர்தலின் போது, அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்தினால், அவை ஆளுங்கட்சிக்கு எதிராக அமையும் போன்ற காரணங்களாலும், விதிமீறலில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள், நிறுவன உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ம் ஆண்டை போல், சென்னையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.