சென்னை: ”கும்பகோணம் கோயிலில், சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு நேற்று வந்தார். பின்னர், ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டு ரகசிய பூஜை செய்து விட்டு சென்றார். அவர் வந்த தகவல் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. எனினும், சில நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று அமைச்சருடன் சேர்ந்து தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க.நிர்வாகிகள் கூறியதாவது:- இந்த கோயிலில் அமாவாசை தினத்தன்று நடைபெறும் ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகளின் தொல்லை விலகும்.
இழந்ததையும் மீண்டும் பெறலாம். ஆத்தா மகமாயி என மனமுருக பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இங்கு வந்து வழிபட்டு சென்றனர். அதன்பிறகு, ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். சசிகலா குடும்பத்தினர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இங்கு ஒவ்வொரு அமாவாசை தோறும் ‘நிகும்பலா’ யாகம் நடக்கும்.
இந்த யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகள் வீழ்ந்து விடுவார்கள். நினைத்த காரியம் கைகூடும். ஏற்கனவே சசிகலாவால் பலர் அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் ஆகி உள்ளனர். தற்போது, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலையாகி வந்துள்ளார். ராஜேந்திரபாலாஜியும் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதனால், கட்சி தலைமையிடம் கண்டிப்பும் பெற்றுள்ளார். எனினும், மீடியாக்களிடம் அவர் பேசும்போது, சர்ச்சை கருத்துகள் வெளியாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில், சசிகலாவுக்காக ரகசியமாக கோயிலுக்கு வந்து யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டுள்ளார். இதனால், சசிகலாவின் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். சசிகலா நினைத்தது நடக்கவேண்டும். தனக்கும் வருகிற தேர்தலில் சீட் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வழிபட்டு இருக்கலாம். இவ்வாறு நிர்வாகிள் தெரிவித்தனர்.