சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே அந்த நபர் குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு சென்னையில் தான் உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என்று நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்தார்.
இது சென்னை மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்த அந்த முடிவு எடுக்கப்பட்டது ஏன் என கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். அவரின் கூற்றுப்படி ‘அறிவிக்கப்பட்ட முடிவு மக்களை பயமுறுத்த அல்ல. தொற்றுப் பரவலைத் தடுக்கவே. கொரோனா சோதனை செய்வதற்கும் முடிவு வருவதற்கும் இடையில் இருக்கும் இரண்டு நாட்களில் நோயாளியின் மூலம் பரவல் ஏற்படுவதைக் கண்டுபிடித்துள்ளோம். பரிசோதனைக்கு செல்பவருக்கு முதல் சோதனையில் நெகட்டிவ் வரும். பின்னர் எடுக்கப்படும் இரண்டாம் கட்ட சோதனையில் பாஸிட்டிவ் என்று வரும். இரண்டு டெஸ்ட்களிலும் நெகட்டிவ் என்று வந்தால்தான், சோதனை செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.