கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. தற்போது வரை 1.4 லட்சம் பாதிப்புகளோடு உலக நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56,36,993 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24,03,744 ஆகவும், பலி எண்ணிக்கை 3,49,273 ஆகவும் உள்ளது. உலகிலேயே அதிக பாதிப்பைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதற்கடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் லாவ் அகர்வால் ‘இந்தியாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி குணமானவர்களின் எண்ணிக்கை விகிதம் 41 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது முதல் ஊரடங்கின் போது 7 சதவீதமாக இருந்தது. அதே போல இறப்பு விகிதமும் 3.3 ல் இருந்து தற்போது 2.83 ஆக குறைந்துள்ளது. உலக இறப்பு விகித சராசரி தற்போது 6.45 சதவிகிதமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.