கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி!

கோவை,மே 3
வே.மாரீஸ்வரன்

கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி, அரசியல் அதிகார அமைப்பு அதிரடி முடிவு .

தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் இருந்து எங்களை விடுதலை செய்ய வேண்டும், அத்துடன் எங்கள் தேவேந்திரகுல சமூகத்திலுள்ள உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து எங்கள் சமூக மக்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு வங்கிக்காக எங்கள் தேவேந்திரகுல சமுதாயத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் அதன்பிறகு எங்களை புறக்கணித்து விடுகிறார்கள். அதனால் அரசியல் அதிகார அமைப்பும் தேவேந்திரகுல வேளாளர்  சமூகமும் இணைந்து வருகிற 21/8/2020 அன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலிருந்து சென்னை கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்தவுள்ளோம் என்று அரசியல் அதிகார அமைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நம்மிடத்தில் இத்தகவலை கூறினார்கள்.

இது குறித்து நாம் தேவேந்திரகுல சமூகத்தினர் மற்றும் அரசியல் அதிகார அமைப்பில் உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம் உங்கள் கோரிக்கை பேரணியின் நோக்கம் என்னவென்று நமக்கே உரித்தான பாணியில் கேட்டபோது சார், மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பூர்வீக வேளாண்மை தொழில் செய்து வரும் சமூகமாகும். அத்துடன் நூற்றுக்கணக்கான கோவில்களில் எங்கள் சமுதாயத்திற்கு முதல் மரியாதையை கோவில் நிர்வாகம் தற்போது வரை வழங்கிக் கொண்டு வருகிறார்கள். மேலும் பண்பாட்டு பெருமைமிகு சமுதாயமாக இருந்து வருகிறார்கள். மூவேந்தர் மரபினர் எனும் படியான இலக்கியம் கல்வெட்டு செப்பேடு முதலான பல்வேறு வரலாற்று தரவுகளை கொண்ட எங்கள் சமூகத்திற்கு பெருமைமிக்க மூத்த தமிழ் குடியை அப்போதைய ஆங்கிலேய அரசு காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் இனம்  (எஸ். சி. ) என்று வகைப்படுத்தி பிழை செய்து விட்டது.

உடனே எங்கள் சமூக முன்னோடிகள் அந்த பிழையை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர் ஆனால் முடியவில்லை. கடந்த 1924 ஆம் ஆண்டு அரசு ஆவண படி எங்கள் சமுதாயம் பொதுப்பிரிவில் இருந்ததும் அறியமுடிகிறது. அன்று முதல் இன்று வரை எங்களது சமுதாய சான்றோர்கள் மற்றும் தலைவர்கள் இந்த பிழையை மாற்றும் முயற்சியில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தொழில் மற்றும் பண்பாட்டு அளவிலும் உலவியல் அளவிலும் நாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்லர் என்பதை நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் களமும் கூட நிரூபித்துள்ளது. ஆனாலும், எங்கள் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாக தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றம் மற்றும் பெயர் மாற்றம் என்ற இரண்டு கோரிக்கைகளை இதுவரை ஆண்ட மற்றும் ஆளும் அரசுகளால் கண்டுகொள்ளப்படவில்லை என்பது எங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது.

அரசியல் தலைமைகள் ஒவ்வொரு காலகட்ட தேர்தலிலும் எங்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எங்கள் சமுதாயத்திற்கு வாக்குறுதி கொடுத்து தொடர்ந்து எங்கள் சமூகம் ஏமாற்றப் பட்டு வருகிறது. இதுவரை எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை என்ற கள நிலையும் சூழ்நிலையும் கருத்தில் கொண்டு கட்சி வேறுபாடு கடந்து எங்கள் சமூக மக்களை ஒருங்கிணைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான சமூக விழிப்புணர்வு பரப்புரையை சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும் என்று எங்கள் சமுதாய மக்கள் விரும்புகிறார்கள். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சென்னை கோட்டையை நோக்கி தமிழகத்தில் யாரும் பார்த்திராத பிரம்மாண்டமான பேரணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் பொது சுகாதார பிரச்சினைகள் முடிவுக்கு வந்த உடன் தமிழக அரசிடம் சட்டப்படி உரிய அனுமதி பெற்று மேற்படி பேரணி 21/8/2020 தேதி நடத்த அரசியல் அதிகார அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று மேற்படி தகவலை நம்மிடத்தில் கூறினார்கள்.