ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தற்போதைய முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டிக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க கடும் போட்டி நிலவுகிறது.
விரைவில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், கூட்டணி பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். நாடு மற்றும் மாநிலத்தின் நலனை கருதி சந்திரபாபு நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அமித்ஷா அழைப்பு விடுத்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார். அப்போது ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் திருப்பதி, ராஜ மகேந்திரபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அமிஷா கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பா.ஜ.க. கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்று டில்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பிரதமரிடம் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் காய் நகர்த்தி வருவதால் ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.