சபாஷ் சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்.!

Filed under: இந்தியா,தமிழகம் |

        IMG_9192 ஏற்கெனவே நாகை மாவட்ட எஸ்.பி.யாக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பெற்றவர் சிபிசக்ரவர்த்தி ஐ.பி.எஸ். இது பற்றி நமது நெற்றிக்கண் இதழிலும் எழுதியிருந்தோம்.

          தற்போது ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி வந்ததிலிருந்தும் பல அதிரடிகளை செய்து நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.இங்கு பொறுப்புக்கு வந்தவுடன் முதல் வேலையாக போக்குவரத்தில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த ஈரோடு மாநகரத்தை நெரிசலிலிருந்து மீட்டார். நெரிசலான நேரங்களில் நகருக்குள் லாரிகள் நுழைய தடை விதித்ததோடு, அதை செயல்படுத்தியும் காட்டினார். கருங்கல்பாளையம் ஆர்.என்.புதூர், நாடார் மேடு, கங்காபுரம் ஆகிய பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து லாரிகளை தடுத்தார்.

                 கடை நேரத்தை மீறி விடியவிடிய மது விற்றுக்கொண்டிருந்த மதுக்கடைகளுக்கு ஆப்பு வைத்தார். தனது இரு சக்கர வாகனத்தில் சாதாரணமாக வந்து நடவடிக்கை எடுத்தார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆறு மாதங்களில் டிரங்க் அன்ட் டிரைவ் வழக்குகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் பதியப்பட்டன. இதனால் குடிமகன்களால் ஏற்படும் விபத்துகளும் குறைந்தன.

       பணியிடமாற்றம் விரும்பும் காவலர்களை காத்திருக்கச் செய்யாமல் உடனடியாக மாற்றிவிடுகிறார். இதனால் காவலர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். காவலர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தால் அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவது மட்டுமின்றி, தனது சொந்த செலவில் பரிசுகளும் அளிக்கிறார். காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பும் ஏற்படுத்தித்ருகிறார்.
சமீபத்தில் வெள்ளோடு அரசு பள்ளி மாணவர்கள் தமிழக அளவிலான கைப்பந்து போட்டியில் பதக்கம் பெற்றார்கள். உடனே அவர்களை அழைத்து அந்த ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஷ¨ வாங்கி பரிசளித்தார்.
தவறுகளைத் தடுப்பது மட்டுமல்ல சரியான விஷயங்களை பாராட்டி அங்கீகரிப்பதும் அவசியம் என்கிறார் அடக்கத்தோடு.