பழைய பர்னிச்சர்களை திருமணத்திற்கான சீர்வரிசையாக கொடுத்ததாக திடீரென திருமணத்தை நிறுத்தியுள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த மணமகன். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவின் ஐதராபாத் பகுதியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனின் வீட்டார் பெண் வீட்டாரிடம் கட்டில், மெத்தை, பீரோ, டிவி, பைக் என பல சீர்வரிசைகளை வரதட்சணையாக கேட்டுள்ளனர். பெண் வீட்டாரும் அவர்கள் கேட்ட வரதட்சணை அனைத்தையும் கொடுத்துள்ளனர். திருமணத்தன்று காலை மணமகள் வீட்டார் அனைவரும் திருமண மண்டபம் வந்துவிட்ட நிலையில் மணமகன் வீட்டார் யாரும் வராமல் இருந்துள்ளனர். இதனால் மணமகன் வீட்டாரை அழைக்க அவர்களது வீட்டிற்கு பெண் வீட்டார் சென்றுள்ளனர். ஆனால் அவர்களோ வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பர்னிச்சர் பொருட்களில் பல ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பொருட்கள் போல இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்துவதாக கூறியுள்ளனர். இதனால் தங்கள் மகள் வாழ்க்கை வீணாகும் என பெண் வீட்டார் கெஞ்சியும் அவர்கள் இறங்குவதாக இல்லை. இதனால் திருமணம் நின்று போன நிலையில் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் காவல் நிலையத்தில் மணமகன் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளனர்.