சென்னையில் 97 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Filed under: தமிழகம் |

சென்னை, அக் 1:
சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல பூச்சியியல் வல்லுனர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இதையடுத்து நிருபர்களிடம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறிகையில், “சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் அடையாறு மண்டலத்தில் 27 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 15 பேரும் அடங்குவர்.

எனவே, இந்த மண்டலங்களில் அனைத்து கட்டிடங்கள் மற்றும் வீடுகளிலும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு கொசுப்புழு வளரிடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டுக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் 2 நபர்கள் என 200 வார்டுகளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரு குழுவில் உள்ள நபர் தினசரி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரு இடத்தில் வாரத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்கவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.