டெல்லி தமிழ்ச் சங்கம் பல வருடங்களாக தமிழ் வளர்ச்சி, தமிழன் உயர்வு என்ற காரணம் காட்டி செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் பொறுப்பு ஏற்ற பல உறுப்பினர்கள் தமிழை வளர்த்த காலமும் உண்டு. சமீபகாலமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி, தனி விரோதம், வறட்டு கௌரவம் போன்ற காரணங்களால் இன்றைய தமிழ்ச் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது. ஒரு கோஷ்டி தனக்கு பிடித்த அரசியல் தலைவரை வைத்து விழா நடத்தினால், அதற்கு எதிர் கோஷ்டி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரை அழைத்து விழா நடத்துகிறார்கள். அந்தளவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி டெல்லி தமிழ்ச் சங்கத்தில் அதிகம் காணப்படுகிறது. இதில் சாதாரண அரசு ஊழியர்களும், தமிழ்ச் சங்கத்தை பயன்படுத்தி, தங்கள் உயர்வு நிலைக்கு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழும்புகிறது.
தற்போது பத்மபூஷன் பட்டம் நடிகர் கமலஹாசனுக்கு அளிக்கப்பட்டது. இது தமிழ் குலத்தின் எழுச்சி. ஆனால் அவரைப் பாராட்டவேண்டிய டெல்லி தமிழ்ச்சங்கம் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் டெல்லி தமிழர்களின் உயர்வுக்காகவும் செம்மொழியான தமிழை போற்றிப் பாதுகாக்கவும் இருபத்தி ஐந்து லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் நடிகர் கமலஹாசனை பாராட்ட, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிறப்பு அழைப்பாளராக அழைத்த தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன், தமிழக முதல்வரிடம் இருந்து பெற்ற இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் நிதியை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் கமலஹாசனை பாராட்டவும் ப.சிதம்பரத்தை கௌரவிக்கவும் அந்த நிதியை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக்கூட அழைக்கவில்லை. இந்த செயலை நன்றி மறந்த செயலாக டெல்லி வாழ் தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.
வேட்டி கட்டிய தமிழன் பிரதமர் ஆவார் என்று நடிகர் கமலஹாசன் கூறிவிட்டார். இதனால் டெல்லி தமிழ்ச் சங்கம். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பிரதமர் ஆக்க விழா எடுத்ததாக கிண்டல் அடிக்கிறார்கள். எந்த மாநிலமும் தங்கள் தாய்மொழியினை வளர்க்க தனிச் சங்கங்கள் அமைப்பது வழக்கம். தாய் மொழியை வளர்ப்பதுடன் ஆளுகின்ற மாநில அரசாங்கத்தில் நல்ல திட்டங்களையும் மற்ற மாநிலத்தவருக்கு வளர்க்கக்கூடிய கடமை உள்ளது. ஆனால் தற்போது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தன் தனது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தங்களுக்கு பிடித்த தலைவர்களை பாராட்டி தங்கள் சுய உயர்வுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது எழும்புகிறது.
தமிழக அரசு தமிழ்குலம் வளர்த்த, வளர்க்க பிறந்த சங்கங்களில் மற்ற மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் குலம் தமிழக முதல்வரை வேண்டுகிறது.
டெய்ல்பீஸ் : தமிழ்ச்சங்கத்தின் தற்போதைய செயலாளர் முகுந்தன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றுபவர். தன்னை தமிழக முதல்வருக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டு, டெல்லியில் சிதம்பரம் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகாலமாக அனைத்து வங்கி பணியாளர்களின் பணியிடமாற்றங்களை செய்துள்ளார். இதன் மூலம் இவருக்கு கணிசமான வருமானமும் கிடைத்துள்ளது.