முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 12-09-21 மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ICDS, NGOs, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், WHO மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.
தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.