ஆளுநர் தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரி என பேசியதற்கு எதிராக டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இந்து மத ரீதியாகவும், தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவும் பேசி வருகிறார். இவரது பேச்சு திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ‘தமிழ்நாடு’ என்று மாநிலத்தின் பெயர் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை ‘தமிழகம்’ என்று அழைப்பதே சரியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். அவரது கருத்தினை நெட்டிசன்கள் டிரோல் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் திராவிட இயக்கத்தால் ‘தமிழ்நாடு’ என்று சூட்டப்பட்ட பெயரே சரியான பெயர் என திராவிட ஆதரவாளர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி செந்தில்குமார், அமைச்சர் சக்கரபாணி, ராயபுரம் எம்.எல்.ஏ மூர்த்தி, எம்.எல்.ஏ திருப்பூர் செல்வராஜ் உட்பட திமுக அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகை டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.