கோவை, ஜூன் 12
மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் ! ஆனால், அந்த கங்கையே சூதகம் ஆனால் மங்கை என்ன செய்வாள்.? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தின் பேராயர் திமோத்தி ரவிந்தர் சிஎஸ்ஐ திருமண்டல சொத்துகளை கொள்ளையடித்த திருட்டு கும்பல்களுக்கு துணை நிற்கும் போது என்ன செய்ய முடியும்.? என்று நம்மிடத்தில் எதிர் கேள்வி கேட்கிறார்கள் திருமண்டலத்தில் கர்த்தருக்கு பயந்து நேர்மையாக பணி புரியும் சில பாதிரியார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையில் நம்மை சந்தித்த சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரியும் ஒருவர் நம்மிடத்தில் பேசும்போது ஐயா உங்கள் நெற்றிக்கண் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். சி.எஸ்.ஐ. சர்ச்சில் கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள குமரன் நகரில் உள்ள தூய பவுல் தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடன் பேச டைம் இருக்கிறதா.? என்று அப்பாவித்தனமாக கேட்டார். அப்போது, நாம் சுதாரித்துக்கொண்டு செய்தியாளர்களுக்கு நேரம் காலம் பார்ப்பது கிடையாது சொல்லுங்க பிரதர் என்று அவரது பதிவை பதிவு செய்ய ஆரம்பித்தோம். திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் அப்போதைய செயலாளர், கன்வீனர், என்று பல பொறுப்புகளில் இருந்த ஜெபரூபன் ஜான்சன் என்பவர் பல கோடி மோசடி செய்தவர் என்று ஊழல் புகார் கூறப்பட்டது. ஆனால், சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் பேராயர் திமோத்தி ரவீந்தர் டயோசிசன் சார்பில் சபை விசுவாசிகளான மூன்று நபர் கொண்ட கமிட்டியை நியமித்து விசாரணை செய்யச் சொன்னார். அந்த விசாரணை கமிஷன் விசாரித்து பல ஆதாரப்பூர்வமான டாக்குமென்ட்களை சேகரித்து ஊழல் நடந்தது உண்மைதான் என்று அறிக்கை சமர்ப்பித்தார்கள். இந்த விசாரணை குழு நடத்திய விசாரணை டாகுமெண்ட்கள் திருப்பூர் சி.எஸ்.ஐ. தூயபவுல் ஆலயத்தில் இருந்தது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெபரூபன் ஜான்சன் என்பவர் தனது கைத்தடி பீட்டர் ஜெயராஜ் என்பவரை அழைத்துக்கொண்டு சர்ச்சுக்கு யாரும் இல்லாத சமயத்தில் சென்றார். அப்போது, அங்கிருந்த பொருளாளர் யோபு என்பவர் இடத்தில் நைசாக பேசி அவரை வெளியே அனுப்பிவிட்டு விசாரணை கமிஷன் விசாரித்து பல உண்மை ஆவணங்களையும் அந்த அறிக்கைகளையும் திருடிச் சென்று விட்டனர். அவர்கள் திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த திருட்டு சம்பவத்தால் சபை விசுவாசிகள் கொந்தளித்தனர். அத்துடன், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க தற்போதைய பாதிரியாரான வில்சன் குமாரிடம் சபை மக்கள் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். பின்பு, சி.எஸ்.ஐ. சர்ச் சபை மக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணைக்கு வந்த போலீசாருக்கு மாமுல் கொடுத்து சரிகட்டி விட்டார் ஊழல் பேர்வழி ஜெபரூபன் ஜான்சன். இந்த விவகாரம் சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் திமோத்தி ரவிந்தருக்கு தெரிஞ்சும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்திற்கு பல கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் உள்ளன. ஜெபரூபன் ஜான்சன் போன்ற ஊழல் பேர்வழிகள் உடன் சில பாதிரியார்கள் கைகோர்த்து கொண்டு பல தவறுகளைச் செய்து வருகிறார்கள்.
ஜெபரூபன் ஜான்சன் உடன் சென்ற பீட்டர் ஜெயராஜ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் என்பது தனிக்கதை. பாதிரியார் வில்சன் குமாரை சமீபத்தில் போலீசில் சிக்க வைத்தது கூட இந்த ஜெபரூபன் ஜான்சன் தான் காரணம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தூய பவுல் ஆலயத்தில் அசன பண்டிகையை சபை மக்கள் திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சியை வைத்து நடத்தினார் இதனால் அதிருப்தி அடைந்த ஜெபரூபன் ஜான்சன் அதற்குப் பழி தீர்ப்பதற்காக தனக்கு அல்லக்கையாக செயல்படும் முட்டைக்கண் என்ற நபரை பயன்படுத்தி சர்ச் நிர்வாகத்தில் பல குளறுபடிகளை செய்துவந்தார்.
தற்போது, வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு இருக்கும் இந்த நேரத்தில், சர்ச்சில் திருமணம் மற்றும் சில காரியங்களை வில்சன் குமார் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவில்லை, பணத்துக்காக ஆசைப்பட்டு திருமண நிகழ்ச்சிகளை செய்து வந்தார். அதை முட்டைக்கண் நபர் வீடியோ எடுத்து பல இடங்களுக்கு அனுப்பினார். இந்த முட்டை கண் நபருக்கு பின்னால் ஜெபரூபன் ஜான்சன் இருக்கிறார் என்று சபை மக்கள் கூறுகிறார்கள். இந்த முட்டைக்கண் நபர் மீது சில கிரிமினல் வழக்குகள் இருப்பதாக சபை மக்கள் கூறுகிறார்கள். அந்தக் கிரிமினல் வழக்குகளில் இருந்து இந்த முட்டைகண் நபர் தப்புவது கஷ்டம்தான். தற்போது வில்சன் குமாரை போலீசில் சிக்க வைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இந்த ஜெபரூபன் ஜான்சன் தான் என்று மேற்படி தகவலை கூறினார்.
கோவை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் உள்ள சொத்துக்களை திருடும் கும்பல் மீது பேராயர் நடவடிக்கை எடுக்காதது ஏன்.? என்று சிஎஸ்ஐ சபை மக்கள் எரிமலையாக குமுறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் தேர்தலில் திமோத்தி ரவீந்தர் நிற்கும்போது பாதிரியார் வில்சன் குமார் உண்டியல் வசூல் மூலம் பேராயருக்கு செலவு செய்த காரணத்தினால் அந்த நன்றியின் விசுவாசத்தை காண்பித்து கொண்டிருப்பதாக மேற்படி தகவலை நம்மிடத்தில் கூறுகிறார்கள் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் உள்ள விசுவாசிகள் சிலர்.