மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள புகைப்படத்தில் பாரதமாதாவின் கையில் தேசிய கொடிக்கு பதிலாக காவிகொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் தமிழகம் முழுதும் வேல் யாத்திரை மூலமாக பிரபலமானவர். இவரது தலைமையில்தான் பாஜக 2021 தேர்தலை எதிர்கொண்டது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பின்னர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக நடவடிக்கைகளில் இருந்து அவர் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். அதன் பிறகு அண்ணாமலை பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2024 தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ள பாஜக டில்லி தலைமை எல்.முருகனை மீண்டும் தமிழ்நாடு பாஜக பணிகளில் ஈடுபட உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.
இன்று காலை கமலாலயத்தில் நடைபெற்ற எல்.முருகன் அறை திறப்பு பூஜையில் அண்ணாமலை, கரு.நாகராஜன், கேசவ விநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. புகைப்படத்தில் எல்.முருகன் இருக்கைக்கு பின்னால் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் மறுபக்கம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா படமும் உள்ளன. இரண்டுக்கும் நடுவே பாரத மாதாவின் படம் உள்ளது. அதில் பாரத மாதாவின் கையில் தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடி உள்ளது.
பாரதமாதா என்றாலே கையில் இருக்கும் தேசிய கொடிதான் நினைவுக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடி 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என கூறினார். ஆனால், தமிழ்நாடு பாஜக அலுவலகத்திலேயே பாரத மாதா கையில் தேசிய கொடிக்கு பதில் காவி கொடி இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.