ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மாணவர்களுக்கு சொந்தமாக அலைபேசி வாங்கிக் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் ஆசிரியர் ராமச்சந்திரன். இவ்வாண்டு இந்தியாவில் 46 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று ஆசிரியர் தினத்தை ஒட்டி டில்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார். பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப்பதக்கம், ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை விருதில் அடங்கும்.
ராமசந்திரன் பணியாற்றும் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை 30 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராமச்சந்திரன் தன் சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஐசிடி (Information Communication Technology) தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு படிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும், டேப்லெட் மற்றும் மடிக்கணினி பயன்பாடு, பியானோ வாசிப்பு, சிலம்பம், ஓவியம், என மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரும் பயிற்சிகளை தருகிறார். பள்ளி வளாகத்தை பசுமையாக வைக்கும் வகையில் மூலிகை தோட்டம் அமைத்துள்ளார்.
ராமச்சந்திரன் தினமும் மாணவர்களை போன்று சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதுடன் இவரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் அவரை ‘மாமா, சித்தப்பா, பெரியப்பா, மச்சான், மாப்பிள்ளை’ என்று உறவு முறை வைத்து அழைக்கின்றனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் முடி திருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் ராமசந்திரன் நேரடியாக மாணவர்கள் வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு முடி திருத்தி விட்டுள்ளார்.
ஆசிரியர் ராமச்சந்திரன் கூறும்போது, “மாணவர்களை எப்படி ஊக்கப்படுத்தி அவர்களுடன் எப்படி நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முதல் நோக்கம். அதன் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். தினசரி பள்ளிக்கு நான் வருவதற்கு முன்பே மாணவர்கள் வந்து அவர்களுடைய வகுப்பறையில் உள்ள Projector ஆன் செய்து இன்றைய பாடங்களை அவர்களே Wifi மூலமாக கனெக்ட் செய்து வைத்திருப்பார்கள். நான் நடத்தவிருக்கும் பாடத்தை அவர்களுக்கு எளிதில் புரியும் படி கற்று கொடுத்து வருகிறேன். எனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டிலேயே நான் மட்டும் தேர்வாகி இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. தகவல் தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவையான வசதி செய்து கொடுத்ததின் அடிப்படையில் நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். எனது பணி காலம் முடியும் வரை கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு உலகத் தர கல்வியைத் தர முழுமையாக பாடுபடுவேன், மாணவர்களின் முன்னேற்றமே என்னுடைய இலக்கு” என்கிறார்.