சென்னை,மே 3
“ஊரடங்கு தளர்வுகளில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்
கொரானாவை எதிர் கொண்டு அதனை வீழ்த்திட மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சுமார் 40நாட்களை கடந்து போன சூழலில் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருகின்றனர்
இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமின்றி குறிப்பிட்ட வேறு சில கடைகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும் உணவகங்கள் வழக்கம் போல் காலையில் தொடங்கி இரவு வரை பார்சல் வழங்கும் வகையில் மட்டும் செயல்படலாம் என உத்தரவிட்டுள்ள நிலையில் தேனீர் கடைகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் போனது தேனீர் கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சார்ந்திருக்கும் தேனீர் கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் பணியாளர்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்காமல், பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் தேனீர், காபி விற்பனை என்பது முற்றிலுமாக முடக்கப்பட்டு விட்டது. அத்துடன் தேனீர் கடைகள் முழுமையாக இல்லை என்றாலும் பகுதி நேரமாக கூட செயல்பட அனுமதிக்காத காரணத்தால் பால் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தேனீர் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் தேனீர் கடைகளையும் இணைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு கடைகளை திறந்து தகுந்த சமூக இடைவெளியை கடை பிடித்து தேனீர் வியாபாரம் செய்ய அனுமதித்து அரசாணை வெளியிடுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி அறிக்கை.