அம்மா உணவகத்தின் மூலம் சென்னையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் ஆரம்பிக்க உள்ளது. அன்று முதல் இவ்வகுப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே அட்மிஷனுக்கு தேவையான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிகள் தொடங்கப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்க அம்மா உணவகங்கள் மூலம் பள்ளிகளுக்கு உணவுகளை தயாரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.