நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் காலமானார். அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் விஜயகாந்துடன் நடித்த பழம்பெரும் நடிகர்கள் தவிர புதுமுக நடிகர், நடிகையர் பலர் விஜயகாந்த் மறைவில் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த சில நாட்களாக சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்ட போது அவரிடம் விஜயகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் விஜயகாந்த் பற்றி கேட்காமல், வேறு ஏதாவது கேளுங்கள் என சொன்னதால் பெரும் சர்ச்சை எழுந்தது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்தவருக்கு இளம் நாயகிகள் மரியாதை செலுத்தாது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பலரும் விமர்சித்தனர். தற்போது அவர் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள், சர்ச்சைகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.