மனுஸ்மிருதி பற்றி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய விவகாரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அரசியல் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி யான விசிக தலைவர் திருமாவளவனை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கம் கொடுக்க திருமாவளவன் ஒன்றும் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணையின் போது, மனுஸ்மிருதி இப்போது சட்ட புத்தகம் இல்லை எனவும், மனுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா என்பதும் பற்றி தெரியாது என்றும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா குறிப்பிட்டனர். விரிவான விவரங்களோடு தாக்கல் செய்வதற்காக மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.