சென்னை, ஜூன் 6
மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசோடு இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கொரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், செல்வி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
செல்வி நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.