தமிழக அமைச்சர் துரைமுருகன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லியில் சந்தித்து பேசினார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட கோரியும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும் காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. செய்தியாளர்களிடம் துரைமுருகன், “உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புப்படி இதுவரை ஒருமுறை கூட கர்நாடகா தண்ணீர் கொடுத்ததே கிடையாது” என்று தெரிவித்தார்.