காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டிட, கட்டுமானப் பொருட்களை அங்கே குவித்துள்ளது என்ற செய்தி, ஏடுகளில் வந்ததைப் பார்த்து, அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அணை கட்டும் முயற்சிக்கு அண்மையில் தடை விதித்தது. அத்துடன், மேக்கேத்தாட்டுப் பகுதியில் அணைகட்டும் ஏற்பாடுகள் நடக்கின்றனவா என்று அறிந்து அறிக்கை அளிக்க ஆய்வுக் குழுவையும் அமைத்தது.
இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்காத நிலையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று தீர்ப்பாயத் தென் மண்டல அமர்வு தனது தீர்ப்பில் கூறியது. இதுபற்றி தங்கள் கருத்துகளையும் விளக்கங்களையும் 05.07.2021 அன்று தீர்ப்பாயத்தில் வந்து தெரிவிக்குமாறு கர்நாடக – தமிழ்நாடு அரசுகளுக்கு ஆணை இட்டது.
அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் இந்தத் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு கர்நாடக அரசு மறு ஆய்வு மனுப்போட்டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அனைத்திந்தியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையக முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே. கோயல், கர்நாடக அரசின் வழக்கறிஞர் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இரத்துச் செய்து (18.06.2021) ஆணையிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் வாதங்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஒருதலைச் சார்பாக நீதிபதி ஏ.கே. கோயல் அமர்வு, பசுமைத் தீர்ப்பாயத் தென்மண்டல அமர்வின் தடையை இரத்து செய்து, கள ஆய்வுக் குழுவையும் கலைத்து விட்டது. இது நீதி இயல் முறைக்கு நேர் முரணான செயலாகும்; அநீதியாகும்!
தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தொடர்புடைய மாநிலங்கள் 05.07.2021 அன்று விளக்கமளிக்க வாய்ப்புத் தந்திருந்தது. அந்த நாளை சற்று முன் கூட்டிப் போட்டு, தமிழ்நாட்டின் விளக்கத்தைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கேட்டிருக்க வேண்டும். அப்படி வாய்ப்பளிக்காதது, தீர்ப்பாயத்தின் ஒருதலைச்சார்பான அணுகுமுறையாகும். இந்தத் தீர்ப்பும் நேரடியாக, அணை கட்டிக் கொள்ளக் கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கிடவில்லை. ஆனால், இத்தீர்ப்பால் துணிச்சல் பெற்று, கர்நாடகத்தின் பா.ச.க. முதலமைச்சர் எடியூரப்பா, மேக்கேதாட்டு அணைகட்டும் பணிகளைத் தொடங்குவேன் என்று ஓங்கி முழங்குகிறார்.
இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மேக்கேதாட்டு அணைக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்ற “தடையை” எடியூரப்பா பொருட்படுத்தவில்லை. ஒன்றிய அரசின் அனுமதி பெறாமல் அணை கட்டினால் தன் கட்சி அரசு தடுக்காது என்ற நம்பிக்கையில் அவர் அவ்வாறு பேசுகிறார்.
காங்கிரசாட்சி ஒன்றிய அரசிலும், கர்நாடகத்திலும் இருந்தபோது ஒன்றிய அரசின் அனுமதி பெறாமலேயே ஏமாவதி, ஏரங்கி, கபிணி அணைகளைக் காவிரியின் குறுக்கே கர்நாடகம் கட்டி, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்தது. இப்படிப்பட்ட மோசமான முன் அனுபவங்கள் தமிழ்நாட்டிற்கு இருந்தும், இதற்கு முன் இருந்த அ.இ.அ.அ.தி.மு.க. ஆட்சியும், இப்போதுள்ள தி.மு.க. ஆட்சியும் மேக்கேதாட்டு அணை கட்டாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரியவாறு எடுக்க வில்லை.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் மேற்படித் தீர்ப்பு வந்தவுடனேயே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நான் வெளியிட்ட அறிக்கையில் (நாள் : 27.05.2021) தமிழ்நாடு அரசு ஓர் ஆய்வுக்குழுவை மேக்கேதாட்டுப் பகுதிக்கு அனுப்பி அணை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளனவா என்று அறிந்து அறிக்கை தர ஏற்பாடு செய்ய வேண்டும், கட்டுமானப் பணிகளைக் கர்நாடகம் தொடங்கியிருந்தால் தடை ஆணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும், ஏற்கெனவெ நிலுவையில் உள்ள மேக்கேதாட்டு அணை வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தேன். ஆனால் தமிழ்நாடு அரசு அசையவில்லை!
இப்பொழுதாவது தமிழ்நாடு அரசு உடனடியாக ஓர் ஆய்வுக் குழுவை மேக்கேதாட்டுப் பகுதிக்கு அனுப்பி அறிக்கை பெற வேண்டும்; இடைக்காலத் தடை ஆணை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள மேக்கேதாட்டு தடை ஆணை கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் புதுவை உட்பட 14 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் 22 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க உயிரைக் கொடுத்தும் போராட தமிழ்நாட்டு மக்கள் அணி திரள வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டுவிட்டால் வெள்ளக்கால மிகை நீர் கூட மேட்டூருக்கு வராமல் கர்நாடகம் தேக்கிக் கொள்ளும்.
மேக்கேதாட்டில் அணை கட்டும் வேலை தொடங்கினால் அணி அணியாக பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் சென்று மேக்கேத்தாட்டிலேயே மறியல் போராட்டம் நடத்த நாம் அணியமாக வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.