மேற்கு வங்க ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

Filed under: இந்தியா |

சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சரக்கு ரயில் மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவர்கள், தேசிய பாதுகாப்பு படையினர், ஆம்புலன்ஸ், மீட்புப்படையினர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு சென்றனர். இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக இருந்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதாகவும், உயர் அதிகாரிகள் அந்த இடத்தை விரைவாக அடைந்துள்ளதாக கூறியுள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைதளத்தில், “ரயில் விபத்து செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.