யானைகள் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீத்திபாளையம் பகுதியில் வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி, வாழை மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு சென்றுவிட்டது. யானைகள் மீண்டும் இரவு வனத்திலிருந்து வெளியே வந்துள்ளது. நள்ளிரவு அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்றுள்ளது. அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை விரைந்து சென்று மூன்று குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது அந்த யானைகள் செல்லப்ப கவுண்டன்புதூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் தஞ்சமடைந்துள்ளது. யானைகளை விரட்டுவதற்கு வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். மூன்று குழுக்கள் போதாது என்றும் கூடுதலாக வனத்துறை குழுக்களை அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.