இன்று அதிகாலை வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. நிலச்சரிவால் வயநாட்டின் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. பல நூறு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அட்டமலா, நூல்புழா, முண்டக்கை, அட்டமலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன. முண்டக்கை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளுடன் ராணுவம், கடற்படை இணைந்துள்ளது. முண்டக்கை பகுதியில் 150 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.