சென்னை,மே 4
நாம் தொடர்ந்து போலி சித்த வைத்தியர் தணிகாசலம் பற்றிய செய்தியினை ஆதார பூர்வமாக வெளியிட்டு வருகிறோம். கடந்த இரண்டாம் தேதி கூட நம் இணைய தளத்தில் வெளியிட்டோம். நம் செய்தி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கும் சென்றது. இந்த நிலையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்,
கோவிட் -19 எனும் கொரனோ வைரஸ் குறித்து வாட்ஸ் அப், முகநூல் போன்ற எலக்ட்ரானிக் மீடியாவில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதார பணிகள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியின்றி தகவல் பரப்புதல் THE EPIDEMIC DISEASES ACT AND REGULATIONS பிரிவு 8 ன்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட வைரஸிக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, மைய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள, ரத்னா சித்த மருத்துவ மனையின் தணிக்காசலம் என்பவர் கோவிட்- 19 எனும் கொரனோ வைரஸிக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தவறான செய்தியை பரவவிட்டு, பொது மக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க, இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை அவர்களால் சென்னை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தொற்று நோய் காலத்தில் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நம் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த சுகாதரத்துறைக்கு நம் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.