விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 13ம் தேதி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி செல்லும் பேரணி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை தடுக்க ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அவற்றையெல்லாம் உடைத்து விட்டு விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடத்திய போராட்டத்தின் அடுத்த பகுதியாக இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விவசாயிகள் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் மத்திய அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் இன்று பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதாகவும் இன்றைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் இன்னும் தீவிரமாக போராட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது.