1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, செப் 23:

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நேற்று நடந்த இந்த விழாவில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்:

திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள், மின்சாரத்தை தேவைக்கேற்ப சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க உள்ளது. திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தை அதிமுக ஆட்சியாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியாளர்கள் தமிழ்நாடு மின்வாரியத்தை சீரழித்துவிட்டனர்.

அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே தரப்பட்டன. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒன்றிய அரசை எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி நான் பதவி ஏற்கவில்லை, பொறுப்பை ஏற்றேன் என்றுதான் சொல்லவேண்டும். தற்போது அமைச்சர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் துறையின் பணிகளை செய்துவருகின்றனர். இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இருக்காது.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.