1.75 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைப் பணிகள் – தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு!

Filed under: சென்னை |

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இச்சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரிசெய்தல் போன்ற பல்வேறு பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் 1.08 கி.மீ. நீளத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை தலைமை செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.  மேலும், சாலை பணிகளை மேற்கொள்ளும் போது  பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து (Milling) புதிய சாலை பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் சாலை உயரமாவது தடுக்கப்படுகிறது.  மேலும், சாலையோரமுள்ள குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் பருவ மழை காலங்களில் நீர் புகாமல் தடுக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பழைய சாலைகளை அகழ்ந்தெடுக்காமல் புதிய சாலைப்பணிகளை மேற்கொண்டால் 1913 என்ற புகார் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முன்னதாக பெருநகர சென்னை மாநகராட்சி,  அடையாறு மண்டலம், வார்டு-172ல்  அமைக்கப்பட்டுள்ள உணர்வு பூங்காவில் (Sensory Park) ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்  மற்றும் வார்டு-175ல், சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ரூ.9.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா பணிகளையும் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., இன்று (17.10.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., துணை  ஆணையாளர்கள் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்), டி.சினேகா, இ.ஆ.ப., (கல்வி) வட்டார துணை ஆணையாளர் (தெற்கு), சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., தலைமை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.