உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆதித்ய ராஜ் சைனி உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் இருந்தவர். இன்று அவரை 13 வயது சிறுமியை குழுவாக பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஹரித்துவாரில் வசிக்கும் 13 வயது சிறுமி காணாமல் போனதாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமியின் சடலம், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் அருகே பஹத்ராபாத் பகுதி நெடுஞ்சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது. ஆதித்ய ராஜ் சைனி உட்பட இருவர் மீது போக்சோ மற்றும் கூட்டுப் பலாத்காரம், கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இதை அடுத்து ஆதித்ய ராஜ் சைனியை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது.