முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 36 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1,684 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், 15 காம்பாக்டர் வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த 195 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 14 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட கனரக காம்பாக்டர் வாகனங்களும், வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிக்க மூன்று சக்கர வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாகப் பராமரிக்க அழகுபடுத்தும் பணிகள், சுவரொட்டிகளை அகற்றுதல், நீண்ட நாட்களாகத் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுதல் போன்ற தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அதனடிப்படையில், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளைச் சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், ரூ.6.24 கோடி மதிப்பிலான 15 கனரக காம்பாக்டர் வாகனங்களும், வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிக்க மூன்று சக்கர வாகனங்களுக்கு மாற்றாக ரூ.30.28 கோடி மதிப்பிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியின்போது, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியில் இருந்தபோது உயிரிழந்த 195 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் தூய்மைப் பணியாளர், சாலைப் பணியாளர், பூங்கா பராமரிப்பாளர், மலேரியா தடுப்பு பணியாளர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 வாரிசுதாரர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது:
உங்கள் அனைவருக்கும் என் அன்பான மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ரிப்பன் கட்டடத்தில் நுழையும் போது என்னுடைய நினைவு 1996 ஆம் ஆண்டிற்குச் சென்று விட்டது. 1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மேயராக என்னைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பணியாற்றுவதற்கு சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். நான் அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டு, மேயர் என்றால் பெரிய அங்கி மற்றும் 100 பவுன் செயின் அணிந்து கொண்டு, செவர்லெட் காரில் செல்வது தான் பணியாக இருந்தது.
அவற்றை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வது, விழாக்களுக்குச் செல்வது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது,
இதுதான் மேயருடைய பணியாக இருந்தது. அதை நான் மாற்றி மக்கள் பணியாற்றுவதுதான் மேயருடைய பணி என அந்தக் கடமையைச் செய்தேன்.
இந்தச் சாலை வழியாக செல்லும்போதெல்லாம், இந்த ரிப்பன் கட்டடத்தை பார்த்துக் கொண்டுதான் செல்வேன். நான் 1996ஆம் ஆண்டு வெற்றி பெற்று மேயராகப் பொறுப்பேற்பதற்காக ஒரு நிகழ்ச்சியை இதே கட்டடத்தில் நடத்தினோம். அதற்கு அழைப்பிதழை தயாரித்து தலைவர் கலைஞர் அவர்களிடத்திலே கொண்டு சென்றோம். அந்த அழைப்பிதழை தலைவர் கலைஞர் அவர்கள் உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். முதல் பக்கத்தில் தலைவர் கலைஞர் எனக்குப் பொன்னாடை அணிவித்தது போன்ற ஒரு புகைப்படம். கடைசி பக்கத்தில் ரிப்பன் கட்டடத்தின் தோற்றம், அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
1996 ஆம் ஆண்டில் வெற்றி பெற்று நாம் ஆட்சிக்கு வந்த போது, என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எல்லோரும் தலைவரிடத்திலே சொன்னார்கள். தலைவர் கலைஞர் என்னை அமைச்சர் ஆக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை. ஆனால் நம்முடைய தோழர்கள் சென்று கட்டாயப்படுத்தினார்கள். தலைவர் கலைஞர் முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பொறுப்புக்கு நான் போட்டியிட்டு, மக்களுடைய வாக்குகளைப் பெற்று, மக்கள் வாக்கைப் பெற்று மேயராகக்கூடிய முதல் மேயராக நான் அன்றைக்குப் பொறுப்பேற்றேன். அந்தக் கட்டடத்தை பார்த்துத் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார், எல்லோரும் சேர்ந்து சென்னை, புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சின்ன அறையில் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை இந்தப் பெரிய கட்டடத்தில் உட்கார வைத்திருக்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பெருமையாகச் சொன்னார். இந்த ரிப்பன் மாளிகை வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும்.
இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 13-ஆம் தேதிதான் முடிவடைய இருக்கிறது. எப்போதும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது எந்த நிகழ்ச்சிக்கும் நான் ஒப்புக் கொள்வது இல்லை. ஏனென்றால் சட்டமன்றப் பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால் அமைச்சராக
இருக்கும்போதும் சரி, அதேதான் நான் செய்து கொண்டு இருந்தேன். ஆனால் நேரு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போதே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, வர வேண்டியது, கொடியசைத்துப் போக வேண்டியது என்று கூறி என்னை அழைத்து வந்தார். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போதுதான், ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, மேடை அமைத்து, பேசவும் வைத்திருக்கிறார். எப்போதும் நேரு மிகவும் வேகமாக இருப்பார். அதனால் அந்த நகராட்சி நிர்வாகத்தை நேரு அவர்களிடம் நாங்கள் ஒப்படைத்திருக்கிறோம். நான் இருந்த பொறுப்பு, இன்றைக்கு அவர் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.
1684 வாகனங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 300 வாகனங்களை இன்று தொடங்கி வைக்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அதேபோன்று கருணை அடிப்படையில் 195 வாரிசுதாரர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. நான் பொறுப்பேற்றபோது சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்ற வாசகத்தைச் சொல்லி அப்பணியில் நாங்கள் ஈடுபட்டோம். இப்போது சிங்காரச் சென்னை மட்டுமல்ல சென்னை 2.0 என்ற வகையிலே பல திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்தச் சென்னை மாநகரைப் பொறுத்தவரை
3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 22 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மாநகராட்சிக்கு உட்பட்டு இருக்கிறார்கள்.
இந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களையும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அதைப்போல அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிற நேரு அவர்களையும், அதிகாரிகளாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய நமது சிறப்பிற்குரிய அதிகாரிகளையும், நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புவது, டெல்லி, மும்பை, கொல்கெத்தா என்று சொல்லக்கூடிய அந்த வரிசைப் பட்டியலில் சென்னையும் இருக்கிறது. சென்னைக்குப் பெருமை சேர்க்கக்கூடிய வகையிலே ஏற்கனவே உள்ளாட்சித் துறையினுடைய மானியத்தில், நகராட்சி நிர்வாகத் துறை மானியத்தில் அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பதிலளித்துப் பேசுகின்ற போது அங்கே இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல சென்னையில் இருக்கக்கூடிய மக்களுக்கும் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இவையெல்லாம் உடனடியாக நிறைவேற்றுகிற அந்த முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று நான் அவர்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.