ஆந்திர மாநிலத்தில் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காரில் வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக்கல்லூரியில் கர்னூல் பகுதியைச் சேர்ந்த மாணவி(24) இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்த பின், பேருந்திற்காக தாமனேஸி பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது, காரில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் சென்றுள்ளனர். உடனே அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் காரை மடக்கி பிடித்து, மாணவியை கர்னூலுக்குக் கடத்திச் சென்ற வாலிபர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில், மாணவியின் சித்தப்பா மகன் ஒருவர் தன் நண்பருடன் சேர்ந்து மாணவியை கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.