உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ‘விக்ரஹா’ அதி நவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், தற்சார்பு இந்தியாவை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளில் இது ஒன்று என்றும், புதிய கப்பல் வடிவமைப்பு முதல் கட்டமைப்பு வரை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதென்றும் கூறினார்.

இந்திய ராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஒன்று அல்லது இரண்டு கப்பல்களுக்காக அல்லாமல், 7 கப்பல்களுக்கான ஒப்பந்தம் தனியார் துறை நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், ஏழு கப்பல்களுமே இன்று பணியில் இணைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

நமது அண்டை நாடுகளுடனான நட்பு, திறந்த நிலை, பேச்சுவார்த்தை மற்றும் இணைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையான சாகர் திட்டத்தின் (பகுதியில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி), இலக்கை எட்டுவதில் கடலோர காவல் படையின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.

விசாகப்பட்டிணத்தை மையமாகக் கொண்டு செயல்படவிருக்கும் இந்த கப்பல், கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி தளபதியின் கட்டுப்பாட்டில் கிழக்கு கடல் பகுதியில் பணியாற்றும். 98 மீட்டர் ரோந்து கப்பலில் 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் பணிபுரியவிருக்கும் இந்த கப்பலின் தலைமை அதிகாரியாக கமாண்டெண்ட் பி என் அனூப் இருப்பார். லார்சன் & டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைதொடர்பு மற்றூம் பயணக்கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு 40/60 போஃபொர்ஸ் துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் இக்கப்பலில் உள்ளன.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவணே, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் கே நடராஜன், கூடுதல் தலைமை இயக்குநர் வி எஸ் பதானியா, கடலோர காவல் படை கிழக்கு பகுதி தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ஏ பி படோலா, கப்பலின் தலைமை அதிகாரி கமாண்டெண்ட் பி என் அனூப் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.