கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது இறுதி சடங்குகள் இன்று குஜராத்தில் நடைபெற்றது. குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதர மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் மோடி இன்று தனது தாயாரை இழந்த நிலையிலும் தாயாரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் உடனடியாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமரின் தாயார் மறைவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார்தான் இந்த நேரத்தில் எனது தாயாரை நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மாநிலங்களை எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா தன் கைப்பட உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருந்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும் தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்! எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை, நானும் கொடுத்தில்லை இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கும் காண முடியுமா? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று எழுதியுள்ளார்.