ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “லவ் டுடே” திரைப்படத்தை இந்தியிலும் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள “லவ் டுடே” திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இதனால் இவ்வாண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக “லவ் டுடே” அமைந்துள்ளது. இதையடுத்து மற்ற மொழிகளில் இத்திரைப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் அதிகமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது. அதையடுத்து இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி ரீமேக் உரிமையை பேந்தம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட உள்ளதாம். ஏற்கனவே இதுபோல “கைதி” மற்றும் “சூரரைப் போற்று” ஆகிய திரைப்படங்களின் ரீமேக்குகளிலும் தமிழில் தயாரித்த நிறுவனங்கள் இணைத் தயாரிப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.