ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பே இல்லை, அதில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கத்தான் செய்வார்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்த ஆன்லைன் மோகம் மக்கள் மத்தியில் குறையவில்லை.
சென்னையை அடுத்த சேலையூரிலுள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் (36) கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.அதில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் மனவிரக்தி கொண்ட அவர் உயிரை மாய்த்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு லோன் ஆப்களில் அவர் கடன் பெற்று சூதாட்டத்தில் விளையாடி வந்த அவர் அனைத்து பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததோடு கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறைந்த நாட்களில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் தங்கள் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் பரிதாப நிலை ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் தாண்டி ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் பணம் பறிபோகும் என்பதை புரிந்து கொண்டாலே ஆன்லைன் சூதாட்டம் தானாகவே ஒழிந்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.