பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கு அவரது முதல் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, இந்தி, தமிழ் உட்பட 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து, “கில்லி,” விக்ரமுடன் இணைந்து “கந்தசாமி,” ரஜினியுடன் “பாபா,” தனுஷுடன் “மாப்பிள்ளை,” “உத்தம வில்லன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இவர், பழம்பெரும் நடிகை சகுந்தலா பருவாவின் மகளும் பாடகரும், நடன கலைஞருமான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். ஆதிஷ் வித்யார்த்தி (60 வயது) தற்போது, அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது முதல் மனைவி தனது இன்ஸ்டாகிராமில், “வாழ்க்கையில் சரியான நபர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தேவை என்று அவர்கள் உங்களிடம் கேட்ட மாட்டார்கள். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்த விஷயங்களை செய்ய வேண்டாம். குழப்பங்கள் நீங்கி உங்கள் வாழ்க்கை அமைதியால் நிரம்பட்டும். நீங்கள் ஆசீர்வாதங்கள் பெறும் நேரமிது. நீங்கள் அதற்குத் தகுதியானவர்’’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாவது திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று இந்த உருக்கமான பதிவில் தெரிகிறது. ரசிகர்களும் அவரது திருமணத்தை விமர்சித்து வருகின்றனர்.