தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகள் மற்றும் அந்த பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால மருத்துவ முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு வருகிறார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வில்லிவாக்கம் பாரதிநகர் 1, 2-வது தெரு, சிட்கோ நகர் 1 முதல் 8 தெருக் களில் நடைபெறும் நிவாரண பணிகளை நேற்று பார்வையிட்டனர்.
அந்த பகுதியில் கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் போன்ற சுகாதாரப் பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவ முகாமையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மாநக ராட்சி, மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் சுகாதார அலுவ லர்களுடன் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 402 நடமாடும் மருத்துவ முகாம்கள் உட்பட 1,112 மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 232 மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் 45 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம் மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் மட்டும் தினசரி 1,500 பேர் பயன்பெற்று வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளில் பிளீச்சிங் பவுடரை போட வேண்டும். மழையினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மழைக்கால மருத்துவ முகாமுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்” என்றார்.
இந்த ஆய்வின்போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை (டிபிஎச்) இயக்குநர் கே.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை (டிஎம்எஸ்) இயக்குநர் ஏ.சந்திரநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.