மீனவர்களை பாராட்டிய உதயநிதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புயல்,  மழை, வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தாலும், மக்களை காக்க முதலில் களத்திற்கு வருபவர்கள் நம் மீனவ நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் தூத்துக்குடியில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கு, மீன்வளத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமீபத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி நெல்லை போன்ற தென் மாவட்டங்களிலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, உயிரைப் பணயம் வைத்து மீனவ நண்பர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டார்கள். மிக்ஜாம் புயலால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, படகுகளோடு களத்தில் இறங்கி மக்களை மீட்டதோடு அரசின் நிவாரணப் பணிகளுக்கும் 1200 மீனவ மக்கள் துணை நின்றனர். நேர்மையும் துணிச்சலும் கேட்காமலேயே பிறருக்கு உதவி செய்கின்ற பண்பையும் கொண்டுள்ள நம் மீனவர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று உரையாற்றினோம்” என்று தெரிவித்துள்ளார்.