குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி:
பாராளுமன்றதேர்தலில்போட்டியிட புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
சோனியா ,ராகுல் கார்கேவுக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி., ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்பது அகில இந்திய தலைமைக்கு விதிவிலக்காகும் என்பது சரி.
ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கும் இவர்களுடைய குடும்பத்திற்கும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தொடர்ந்து கொடுத்தால் அந்தந்த மாநிலத்தில் உள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கட்சி வளர்ச்சி என்பது தொண்டர்களிடையே ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது.
எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைவர்களின் குடும்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் இருந்தால் அதே குடும்பத்தில் உள்ளவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் .கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸின் தொண்டர்களின் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .எனவே அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதில் தலையிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.