புதுடெல்லி : கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் வகையிலான மூடநம்பிக்கைகளையும், வதந்திகளையும் அனுமதிகக் கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்கள் ஒரு மோசமான தொற்று என்றும் , அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு, வதந்திகளையும், தவறான தகவல்களையும் கட்டுப்படுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தைப் பற்றி போதிய அளவில் அல்லாத, தவறான புரிதல் நம்மிடம் இருக்குமானால், தொற்றுக்கு எதிரான போரில் வெல்ல முடியாது என்று எச்சரித்துள்ளார்.
சமூக விலகல் என்னும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை சில மாநிலங்களில் பின்பற்றாத பொறுப்பற்ற தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், புதுதில்லியில் நடைபெற்ற சமீபத்திய மாநாட்டில் இது வெளிப்படையாகத் தெரிந்தது எனக் கூறியுள்ளார். விதிமுறைகளைப் பரப்புவதும், அவற்றைக் கடுமையாகப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொற்று வேகமாகப் பரவி வருவதற்கான அறிவியல் ஆதாரம், பெரும் விழிப்புணர்வின் அவசரம் ஆகியவை, சாதி, மத, இன, மொழி, பிராந்திய, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து, முழு சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்த தேவையானவை என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், தற்போதைய சவாலை முறியடிக்கும் வரையில், சமூக விலகல் விதிமுறைகளை லேசாக எடுத்துக்கொள்வதோ, பெருமளவிலான கூட்டத்தைக் கூட்டும் மாநாடுகளை நடத்துவதோ இல்லை என்ற பொதுவான புரிதல் அனைத்து மதப்பிரிவினருக்கும் இருக்க வேண்டும் என்று திரு. நாயுடு வலியுறுத்தியுள்ளார். ‘’பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவது போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் இனி நேராது என்று நாம் நம்பலாம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்ந்து இருக்க இது நேரம் இல்லை என்றும், மிகக் கடும் சவால் இனிமேல்தான் உள்ளது என்றும் கூறியுள்ள திரு. நாயுடு, ‘’நாம் எப்போதும் விழிப்பாக இருந்து, இந்தத் தீமையை ஒன்று சேர்ந்து விரட்ட வேண்டும். அனைத்து துணிச்சல் மிக்க வீரர்களும், சிந்தனையிலும், செயல்பாட்டிலும் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதே இப்போதைய தேவை’’, என்று தெரிவித்துள்ளார்.
களப் பணியாளர்களின், குறிப்பாக மருத்துவத் தொழில் நிபுணர்களின், பாதுகாப்பு பற்றிய அக்கறையும், மதிப்பும், நமது நோக்கத்தை எட்டுவதற்கு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், மனித குலம் அனுபவித்து வரும் துயரங்களுக்கு முடிவு கட்ட, அன்பான செயல்பாடு, பரிவான, உறுதியான, துடிப்புமிகு நடவடிக்கைகள், தற்போது நாம் கடந்து வரும் இருட்டு குகையின் முடிவை எட்டும் வகையில் முன்னேறிச் செல்ல ஒரு முக்கிய முயற்சியாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.