ஈஸ்டர் கொண்டாட்டம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.
திருச்சியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி திருச்சியில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்தவ பண்டிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் என்பதால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்நாள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு இயேசு உயிர்த்தெழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். சிறப்பு பிரார்த்தனையிலும் பங்கேற்றனர். திருச்சி பாலக்கரை பசிலிக்கா ஆலயம், மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள தேவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.
பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது. இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர்.
இயேசு உயிர்த்தெழுந்த நேரம் வந்ததும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். திருச்சியில் உள்ள தேவாலயங்களில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.