சென்னை, ஜூன் 10
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (10.06.2020) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறையின் சார்நிலை அலுவலர்களுடன் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து இணைய வழி காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்ட திருக்கோயில்களுக்கான வளர்ச்சித்திட்டப்பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முனைப்புடன் பணியாற்ற வேண்டும். அதேபோல் 2011-12 முதல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் உரிய தரத்துடன் முடிக்க வேண்டும். திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பாக தொல்லியல் துறை கருத்துரு, மண்டல குழுவின் அனுமதி, மாநில குழு அனுமதி மற்றும் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற குழு அனுமதி ஆகியவற்றை விரைவாக பெற்று மதிப்பீடு தயார் செய்து பணிகளை தொடங்க வேண்டும். வளர்ச்சித்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் தவறு செய்யும் அலுவலர்கள் மீதும், ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வின்போது அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கிராமக் கோயில் திருத்தேர் திருப்பணிகள் மற்றும் தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிகளை விரைவாதக முடிக்க வேண்டும். திருக்கோயில்களுக்குவருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் தங்கும் அறைகள், அன்னதானக் கூடம், கழிவறைகள் கட்டும் பணிகள் மிகவும் தரமாகவும், கோயில்களின் அமைப்பிற்கு ஏற்றாற்போல் வடிவமைத்து கட்டப்பட வேண்டும். ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிகளையும், காலத் தாமதம் இல்லாமல் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்த வேண்டும். திருக்கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களைத் தூர்வாரி அதற்கான வரத்து வாய்க்கால்களை சீரமைத்து வரும் பருவமழைக் காலத்திற்குள் அனைத்து திருக்குளங்களும் முழுமையாக நிரம்பும் வகையில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர்/ஆணையர் பணீந்திர ரெட்டி, கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர் வான்மதி, கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மற்றும் தலைமையிட அலுவலர்கள் கூட்டத்தில் உடனிருந்தார்கள். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் மண்டல இணை ஆணையர்கள் ஹரிப்ரியா, சுதர்சன், ஜெயராமன், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பணியாற்றும் அலுவலக தலைமையிடங்களிலிருந்து காணொலி காட்சி மூலம் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்.